மயூரன், அன்ரூ சான் உட்பட ஏனைய அறுவருக்கும் தண்டனை நிறைவேற்றம்! video&photo
மயூரன், அன்ரூ சான் உட்பட ஏனைய அறுவருக்கும் தண்டனை நிறைவேற்றம்!
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழர் மயூரன் சுகுமாறன் உள்பட 8 பேரின் மரண தண்டனை நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் போதைப்பொருட்கள் கடத்தல் என்பது கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றை விட கொடிய குற்றமாக கருதப்படுகிறது. அங்கு போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அந்த நாட்டில், கடந்த 2005 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி, 8.3 கிலோ ஹெராயின் போதைப்பொருளை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த மயூரன் சுகுமாறன், அண்ட்ரூ சான் உள்ளிட்ட 9 பேர் சிக்கினார்கள். இவர்களில் மயூரன் சுகுமாறன், இலங்கைத் தமிழர் ஆவார்.
9 பேரையும், பாலித் தீவில் பொலிஸார் கைது செய்ததால், அந்த வழக்கு ‘பாலி-9’ என்றழைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த பாலி நீதிமன்றம், இந்த கடத்தல் கும்பலின் தலைவர்கள் என்று கருதிய மயூரன் சுகுமாறனுக்கும், அண்ட்ரூ சானுக்கும் மரண தண்டனை விதித்தது. மற்ற 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டது.
மரண தண்டனையை எதிர்த்து மயூரன் சுகுமாறனும், அண்ட்ரூ சானும் 10 ஆண்டு காலம் சட்டப்போராட்டம் நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோவிடம் கருணை மனுக்களை தாக்கல் செய்தனர். அவற்றை அவர் தள்ளுபடி செய்தார்.
அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் இந்தோனேசிய அரசு உறுதியாக இருந்தது. இதே போன்று போதைப்பொருள் வழக்குகளில் சிக்கிய வேறு 7 பேர் என மொத்தம் 9 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தது.
இந்த ஒன்பது பேரில் 4 பேர் நைஜீரியா நாட்டினர், இந்தோனேசியா, பிரேசில், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தண்டனையை நிறைவேற்றுவதற்காக அவர்களை உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்ட நுசகம்பன்கன் தீவு சிறைக்கு கடந்த மாதம் 4 ஆம் திகதி மாற்றப்பட்டனர்.
இந்தோனேசியாவை சேர்ந்த ஒருவரை தவிர பிற 8 பேரையும் மரண தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர்களது நாடுகள் மட்டுமல்ல, சர்வதேச நாடுகள் பலவும் வலியுறுத்தி வந்தன. ஆனால் எல்லா வேண்டுகோள்களையும் அதிபர் ஜோகோ விடோடோ திட்டவட்டமாக நிராகரித்து விட்டார்.
இந்த நிலையில், 9 பேரின் மரண தண்டனையும் 28 ஆம் திகதி நிறைவேற்றப்படும் என இந்தோனேசியா அரசு அறிவித்தது. இது தொடர்பாக 9 கைதிகளுக்கும் 72 மணி நேர அறிவித்தலும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் மரணத்தின் பிடியில் இருந்து தப்புவதற்கு இனி ஒரு சட்ட வழியும் இல்லை என்று உருவானது.
அவர்களது மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சிறை நிர்வாகம் முழுவீச்சில் செய்து வந்தது.
உடல்களை வைத்து எடுத்துச்செல்வதற்கு பளபளக்கும் துணியால் அலங்கரிக்கப்பட்ட 9 சவப்பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக கைதிகள் அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினரை கடைசியாக சந்திக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
குறிப்பாக, மயூரன் சுகுமாறனின் தாயார் ராஜனி, தந்தை சுகுமாறன், சகோதரி பிருந்தா, சகோதரர் மைக்கேல் ஆகியோரும், அண்ட்ரூ சானின் புதுமனைவி பெபி ஹீயர்விலா மற்றும் குடும்பத்தினர் நேற்று நுசகம்பன்கன் சிறைக்கு வந்தனர். அவர்கள் அழுதவாறே வந்தனர். இதில், மயூரன் சுகுமாறனின் சகோதரி பிருந்தா மயங்கி விழுந்தார். இதனால் பதற்றம் ஏற்பட்டது. அவர் தூக்கிச்செல்லப்பட்டார்.