சாதனை படைத்த சானியா மிர்சா

அமெரிக்காவின் சார்ல்ஸ்டன் நகரில் பேமிளி சர்க்கிள் கிண்ண (Family Circle Cup) சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகின்றது.
இதில் நேற்று (12) நடந்த பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, ஆஸ்திரேலியாவின் கேசி டெல்லாக்குவா – குரோஷியாவின் தாரிஜா ஜூராக் இணையை எதிர்கொண்டனர்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சானியா–ஹிங்கிஸ் ஜோடி 6–0, 6–4 என்ற நேர் செட்டில் வெறும் 57 நிமிடங்களில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினர்.
சானியா, ஹிங்கிசுடன் ஜோடி சேர்ந்த பிறகு தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
இது கடந்த ஒரு ஆண்டில் சானியாவுக்கு கிடைத்த 7 ஆவது சர்வதேச பட்டம். இந்த வெற்றியின் மூலம் 470 தரவரிசை புள்ளிகளை கூடுதலாக பெற்ற சானியா மிர்சா, தனது ஒட்டுமொத்த புள்ளி எண்ணிக்கையை 7,965 ஆக உயர்த்தினார்.
இதையடுத்து இத்தாலியின் சாரா எர்ரானி (7,640 புள்ளி), ராபர்ட்டா வின்சி (7,640) ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு இரட்டையர் தரவரிசையில் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை ஒருவர் தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். புதிய தரவரிசை பட்டியல் இன்று (13) அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ட்டினா ஹிங்கிஸ், இரட்டையர் தரவரிசையில் 4 ஆவது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
சானியா மிர்சா, ஆசிய அளவில் முதலாம் இடத்தை பெற்ற 4 ஆவது வீராங்கனை ஆவார் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்புக்குரியவரும் இவர்தான்.
இது குறித்து சானியா மிர்சா கூறுகையில், முதல் இடத்தை என்றாவது ஒரு நாள் பிடிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரினதும் கனவாக இருக்கும் நானும் இதற்கு விதிவிலக்கல்ல முதல் இடத்தை பெற்றுத்தந்த இந்த போட்டியை எனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.
மார்ட்டினா ஹிங்கிஸ் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார், அவர் தலை சிறந்த வீராங்கனை நானும், அவரும் இணைந்து மேலும் நிறைய பட்டங்களை வெல்வோம் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
இரட்டையர் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் லியாண்டர் பெயசும், மகேஷ் பூபதியும் முதலிடத்தில் இருந்துள்ளனர். அந்த வரிசையில் 28 வயதான சானியாவும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Thank you for visiting my website