லார்ஜ் ஹட்ரன் கொலைடர் ஆய்வுக்கூடம் மீண்டும் திறக்கப்பட்டது

அணுவின் நுண்துகள்களை அதிவேகத்தில் செலுத்தி அவற்றை மோதச்செய்து பரிசோதிக்கும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த லார்ஜ் ஹட்ரன் கொலைடர் ஆய்வுக்கூடம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றிகரமாக செயல்படத்துவங்கியிருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இந்த கொல்லைடர் இயந்திர கட்டமைப்பானது இரண்டு கட்ட மேம்படுத்தலுக்குப் பிறகு மீண்டும் செயற்படத்துவங்கியிருக்கிறது.
அதன் இறுதிகட்டச் செயல்பாடாக, மண்ணுக்குள் கட்டப்பட்டிருக்கும் மிக நீண்ட சுரங்கத்துக்குள் அணு நுண் துகள்களின் கற்றைகளைகளை தாம் வெற்றிகரமாக ஏவ முடிந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செர்ன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் அணு ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பால் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
பேரண்டத்தின் பெரும்பகுதியாக இருக்கும் கண்ணுக்கு தெரியாத புலம் எதனால் ஆனது என்பதை புரிந்துகொள்ள இந்த புதிய ஆய்வுகள் பயன்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த ஒட்டுமொத்த பரிசோதனை உபகரண கட்டமைப்பின் மேம்படுத்தலின்போது, இந்த சுரங்கத்தின் ஒவ்வொரு 20 கிலோமீட்டரும் திறந்து அங்கிருக்கும் காந்தங்கள் சரிபார்க்கப்பட்டு இணைப்புக்களின் வலிமை மேம்படுத்தப்பட்டது.
அணுவுக்கு நிறையைத் வழங்கக்கூடிய ஹிக்ஸ் போஸான் எனப்படும் நுண்துகள்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதற்கான சமிக்ஞைகளை இந்த ஆய்வுக்கூடத்தில் தான் 2012 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

Thank you for visiting my website