அதிக உப்புக்கொடுத்து 5 வயது மகனைக் கொன்ற தாய்க்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை!
அமெரிக்காவில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது 5 வயது மகனுக்கு அளவுக்கு அதிகமாக பல ஆண்டுகளாக உப்பு கொடுத்துக் கொலை செய்த தாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கென்டுக்கி மாநிலத்தில் உள்ள ஸ்காட்ஸ்வில்லைச் சேர்ந்த லேசி ஸ்பியர்ஸ்(27), அவரது 5 வயது மகன் கார்னட் பால் ஸ்பியர்ஸ் கைக்குழந்தையாக இருக்கும்போதில் இருந்தே அவருக்கு உப்பை உண்ணக்கொடுத்து வந்துள்ளார்.
ஆண்டுக் கணக்கில் உப்பு கொடுக்கப்பட்டதால் சிறுவனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
சிறுவனின் உடல்நலம் பாதிக்கப்பட்டமை குறித்து லேசி ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தகவல்களை வெளியிட்டு வந்துள்ளார்.
பிறரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் இச்செயலை அவர் செய்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் நியூயார்க் நகரிற்கு இடம்பெயர்ந்துள்ளார். அங்கு சென்றதும் சிறுவனின் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
சிறுவனின் உடலில் அளவுக்கு அதிகமாக சோடியம் இருப்பதை மருத்துவர்கள் அவதானித்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி லேசியை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம், லேசிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
லேசி ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அதிகபட்ச தண்டனையான 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையில் 5 வருடங்கள் குறைக்கப்பட்டுள்ளது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
Thank you for visiting my website